இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத் தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்ப தற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ஆம் என்று கூறுவான். இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்) என்று அவனுக்கு கூறப்படும்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-6538
ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை
இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர். இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, “அபூ ஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-99
இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் பிறமதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?
மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதன் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு
இணை வைப்பதின் பேராபத் தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.
9:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்த மானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ் வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்:9:28.)
அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளி யேற்றாதோருக்கும் நன்மை செய்வ தையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
No comments:
Post a Comment