☘️ *இஸ்லாமிய ஒழுக்கங்கள்* ☘️
தொடர்-2
நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4115
நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்
நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5617
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: “மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்”
நூல்: புகாரி 5615
பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்”
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 153
சாப்பிட்ட பின் விரல்களைச் சூப்புதல்
(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களைச் சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4136
பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்
நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு “அதிலே கொழுப்பு இருக்கிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 211
சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: புகாரி 5458
வலது புறமிருந்து வினியோகிக்கத் துவக்குதல்
நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு “வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5612
வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்
நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் “(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்” என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5620
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment