☘️ இஸ்லாமிய ஒழுக்கங்கள் ☘️
தொடர்-5
உறங்கும் ஒழுங்குகள்
தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்..
ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்
எண்ணெய் விளக்குகளை அணைக்க வேண்டும்..
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ‘நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்’ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 79. பிரார்த்தனைகள்
தூங்கும் முன் உளூச் செய்ய வேண்டும்..
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள்.
என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது
விரிப்பை பயன்படுத்தும் முறை..
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
பிஸ்மில்லாஹ் கூறுதல்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்
தூங்கும் முன் ஓத வேண்டியவை..
குர்ஆன் அத்தியாயங்கள்..
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்
குர்ஆன் வசனங்கள்..
ஆயத்துல் குர்ஸி..
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்’
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
இன்ஷாஅல்லாஹ் தொடரும்..
No comments:
Post a Comment